(என் காதலி அடுத்தவன் மனைவி ஆன பின்பு..)
உன்னைச் சிந்தனை சிறையில்
இட்ட நொடியில்,
வரிந்து கட்டியே வர்ணனை பாட
சிலிர்ந்த என் பைந்தமிழை
இரும்பு கரம் கொண்டே இடர்நிறுத்தி,
"இவள் மணமானவள்.
வர்ணனை தாண்டிய வரிகளுக்கு
வருகவே என் முத்தமிழே!" என
உன் அழகுரை பாடாமல்
புகழுரை மீட்ட வந்தேன்
அமிழ்தின் உருவே!
முடிச்சுகள் மூன்று
அன்று முடியும் முன்பே,
உனைக் கற்று
நான் எழுதிய அரிச்சுவடிகள்
இன்று நூற் கடலாய்
பரந்து விரிந்தன.
காவியத்தின் நாயகி அல்ல நீ!
கொள்ளைத்தமிழால் மெருகேற்றி
பிள்ளைத்தமிழ் பாடும் முல்லையம்மா நீ!
தாய் உள்ளம் கொண்ட சேய் நீ!
புழுதி பரப்பி புயலாய் பாய்ந்தோடிய
புரவி என இருந்த என் வாழ்வில்,
அன்பெனும் குடையின் கீழ் நின்று
பண்பெனும் தடையைக் கொண்டு நிலைநிறுத்தி,
புயலைக் காட்டிலும் பூவின் வலிமை
பெரிதென உணரச் செய்தாய்.
புதுப் பாதைதனின் வழியைத் தந்தாய்.
பிழையற்ற உன் சிரிப்பாலே
புலிகள் கூட புற்கள் மேயும்
மானாய் மாறிப் போகும்.
பூட்டிய வானம் திறந்து,
செல்வங்கள் மழையாய் விழுந்து
மலையென குவிந்திருந்தாலும்
உன் மனம் என்னும்
மென்மலரின் முன்னே
சுருங்கித் தான் போகும்.
இலையின் மேல் இசைந்தாடும்
நீர்த்துளி போல
வரைந்தோடும் இவ்வுறவு
தொடர வேண்டும் வளர்பிறையாய்.
பந்தம் என்னும் மலர்களை
அன்பு என்னும் நாறில் கோர்த்து
சொந்தம் கொண்டு மகிழுவோம்.
சொர்க்கத்தை விலை பேசுவோம்!


0 comments:
Post a Comment