Friday, December 23, 2011

நிலா


நிலா,
வானம் என்னும் வாணலியில்
வறுக்கப்பட்ட வெள்ளி அப்பளம்.

வெண்துணி அணிந்த
கைம்பெண் நீயோ?
இல்லை,
நீ ஒரு கவின்மிகு காரிகை.
உனைக் களவாட சுற்றுதோ
ஒளிரும் கள்வர் கூட்டம்.

காதலில் கரைந்து கரைந்து 
பிறையாய் தேய்ந்தாயோ பெண்ணே!

காதலின் அங்கம் நீ!
காதல் அரிச்சுவடியில்
மெய்யிலே தவழ்ந்திடும் உயிர்களை
இணைத்திடும் பாலம் நீ!

உள்ளத்தில் உறங்கிடும் உணர்வுகளை
ஊடுருவி வெளியே கொணரும்
வெளிச்சம் நீ!

இருளில் இடறி துவண்டு கிடக்கும்
பூமிச் சிற்பத்திற்கு
உன் கீற்றுப்பாலே தீர்த்தம்.

பெண்ணாயினும்,
மாதவிலக்கு உனக்கு விலக்கு
ஆயினும்,
மாதமொரு முறை
எங்கு மறைந்து நிற்கின்றாய்?

உன் முகத்தில் உள்ள வடுக்கள்,
மேகங்கள் மோகம் கொண்டு
மோதியதால் வந்த காயங்களோ?

நிலா,
நீ எட்ட முடியாத தொலைவில்
வடிக்கப்பட்ட வட்ட கோபுரம்.
                                                                  -மழைக்கனல்

0 comments:

Post a Comment