Thursday, February 7, 2013

எங்கப்பன்..




திண்ணையில சாஞ்சிருந்த 
எங்கப்பன காணலியே 
தெரு பொறுக்க போனாரோ 
யார கெடுக்க போனாரோ 

பன்னெண்டு வயசப்போ எனக்கு 
கூத்தியாள கூட்டாந்து 
கூர மேல தூக்கி வச்சு 
கோபுரமா இருந்தவள
குப்ப மேடு தள்ளிட்டான்

தவமிருந்து பெத்த என்ன 
தனியாளா நின்னு வளத்து 
உலகம் எனக்கு புரிய வச்சு 
சீக்கு பிடிச்சு செத்தாளே 
சீதை அவ சீமாட்டி 

காச நோயும் வந்து நின்னு 
காஞ்சு கிடந்தான் எங்கப்பன் 
சொகத்துக்கு வந்தவளும்
சுதி இழந்து போனாளே 

அடுத்த வீட்டு அய்யாசாமி 
ஆறுதலா அரவணைக்க 
அந்தி சாயும் நேரத்துலே 
ஆத்த கடந்து ஓடினாளே 

காசிருந்தும் காச நோயால் 
கருகிப் போன எங்கப்பன் 
சோறு போட நாதி வேண்டி 
எந்திண்ணையில  சேந்தானே 

திண்ணையில சாஞ்சிருந்த
எங்கப்பன காணலியே 
தெரு பொறுக்க போனாரோ 
யார கெடுக்க போனாரோ 

உயிரு போனா போகுது 
உயிலு எங்க வச்சிருப்பான் 
உலகம் காட்டுன உத்தமன் 
உருப்புடாத எங்கப்பன்.. 

Monday, February 4, 2013

போதவில்லை




http://rollinthescrolls.files.wordpress.com/2012/11/broken-doll-on-tile-floor-jill-battaglia4.jpg



மூக்கோடு மூக்குரச
மூச்சு முட்ட
நீ கொடுத்த முத்தங்கள்
போதவில்லை எனக்கு.

இறுக்கக் கட்டிக் கொண்டு
இரவில் உன்னோடு
நான் கண்ட சொப்பணங்கள்
போதவில்லை எனக்கு.

பசியில்லை என்ற போதிலும்
ஊட்டி விட நீயிருந்தால்
ஊட்டம் தரும் உணவுகள்
போதவில்லை எனக்கு.

கையொடிந்து காலொடிந்து
மூலையிலே நான் கிடக்க
நீ தீண்டிய நாட்களும்
போதவில்லை எனக்கு.

குழந்தையிடம் பொம்மை சொன்னது..

சாயம் போன விவசாயம்




 http://www.flash-screen.com/free-wallpaper/terrible-drought-land/drought-land,1366x768,58162.jpg

காய்ந்த சருகுகள்
காயாத ரணங்கள்.
வாழ்ந்த காலங்கள்
வாழ்விழந்த நிலங்கள்.

காறி உமிழக் கூட
மாரியிடம் ஈரமில்லை.
அன்னை பூமி
அனாதை சாமி ஆனது.

மண்ணை நம்பிய
மனங்கள் எல்லாம்
மலடுகள் ஆனது.

கண்ணைப் பறித்த
வளங்கள் எல்லாம்
காணாமல் போனது.

விவசாயத்தின் சாயம் இன்று
மாறி மருங்கிப் போனது.
பச்சை எல்லாம் வெளுத்து
வெறும் நச்சை மட்டும் உமிழுது.

புத்தம் புது வளர்ச்சிகள் யாவும்
பூமிக்கு நரம்புத் தளர்ச்சியே தந்தது.
ஆடி அடங்கும் பூமிக்கு
இங்கு ஆடை யார் தருவது ?

நெல்லுக்கு நெத்திக்காசு
வைக்கும் முன்னே
விதைகள் கொஞ்சம்
விளைய விழைவோம்!!