Saturday, December 31, 2011

ஆடை



மானம் காக்கும் ஆடை
இன்று மாதர் கோரும்
ஆச்சர்ய குறியானது..

வேண்டும்.. வேண்டும்..



அடி தாமரையே,
இன்னும் ஒரு ஜனனம் வேண்டும்.
ஜாதி என்னும் விதியினைத் திருத்திட வேண்டும்.

உன் உள்ளக் கிடங்கில் தவிக்கும் சொற்கள்
உதட்டில் வர வேண்டும்.
உன் உதட்டில் நெருடும் சொற்கள்
என் இதழில் தர வேண்டும்.

காதலை மறைக்கும் காட்சிகளை
இந்த காரிகை கடந்திட வேண்டும்.
காதல் மரிக்கும் காலம் முன்னே
அந்த காரணம் கண்டிட வேண்டும்.

சலனம் தொடுக்கும் மன்மதன் அம்பினை
சலவை செய்திட வேண்டும்.
காதல் விடுகதை விடுக்கும் அம்பினை
காட்சிப் பொருளாக்க வேண்டும்.

இருந்தும் இறந்தும் நகர்கின்ற நரகம்
இன்றே நின்றிட வேண்டும்.
விருப்பும் வெறுப்பும் அலையென அடிக்குது
விடுதலை வென்றிட வேண்டும்.

உன் மௌனம் பேசும் மொழியின் அர்த்தம்
சம்மதம் என்றால்,
புது சரித்திரம் எழுதிட வேண்டும்

சம்மதம் என்ற சொல்லுக்கே 
இங்கு தடை என்றால்,
அதுவே எனக்கு சவக்குழி ஆகிட வேண்டும்.

அய்யா பாரதி,
உன்னைப் போல்
நான் கண்ணனைக் காதலிக்கவில்லை.
ஒரு கன்னியைக் காதலித்துத் தொலைத்து விட்டேன்.

உன் வார்த்தை நிறைவேற,
இன்னும் ஒரு யுகம் காத்திரு.
மீண்டும் ஒரு ஜனனம் எடுத்து
புதியதொரு உலகம் செய்கிறேன்.

வண்ணத்துப்பூச்சி



எப்போது நீ
ஹோலி பண்டிகையில்
பங்கேற்றாய்?

என் செல்லமே



தங்கத்திலே தொட்டில் கட்டி
தங்கமே,
உன்னைத் தாலாட்டுவேன்.

மரகதம் தான் தேடி எடுத்து
மணியே,
உனக்கு மகுடம் சூட்டுவேன்.

நியூட்டனின் விதியை மாற்றி எழுதி
என் தென்றலே,
உன் கால்கள் தரையைத் தொடாமல் தாங்குவேன்.

தேவர்களுக்கே சொந்தமாமே பாரிஜாத பூ
பொன்னே,
உன் தலையில் நாளும் சூட்டி மகிழ்வேன்.

என் வெண்ணிலவே,
வெயிலில் நீ வாடாமல் இருக்க
அந்த  மேகத்தைத்  தோகையாய் மாற்றி
உன் மேல் பரப்புவேன்.

காஞ்சிவரத்தை விலைக்கு வாங்கி
கண்ணே,
உனக்குக் கல்யாண பட்டு தருவேன்.

என் உயிரையே கயிறாக்கி
உயிரே,
உனக்குத் தாலிக்கொடி நான் தருவேன்.

என் காதலையே கவசமாக்கி
என் செல்லமே செல்லம்,
உன் கடைசி வரை நான் வருவேன்.

ஈகோ



பன்னீரின் மேல்
படியும்
பாசிகள்..

கொலுசு



உன் கால்கள்
எப்போது பெண்ணே
சங்கீதம் கற்றது?

சொர்க்கத்தை விலை பேசுவோம்..



(என் காதலி அடுத்தவன் மனைவி ஆன பின்பு..)

உன்னைச் சிந்தனை சிறையில் 
இட்ட நொடியில்,
வரிந்து கட்டியே வர்ணனை பாட
சிலிர்ந்த என் பைந்தமிழை
இரும்பு கரம் கொண்டே இடர்நிறுத்தி,
"இவள் மணமானவள்.
வர்ணனை தாண்டிய வரிகளுக்கு
வருகவே என் முத்தமிழே!" என
உன் அழகுரை பாடாமல்
 புகழுரை மீட்ட வந்தேன்
அமிழ்தின் உருவே!

முடிச்சுகள் மூன்று
அன்று முடியும் முன்பே,
உனைக் கற்று
நான் எழுதிய அரிச்சுவடிகள்
இன்று நூற் கடலாய்
பரந்து விரிந்தன.

காவியத்தின் நாயகி அல்ல நீ!
கொள்ளைத்தமிழால் மெருகேற்றி 
பிள்ளைத்தமிழ் பாடும் முல்லையம்மா நீ!
தாய் உள்ளம் கொண்ட சேய் நீ!

புழுதி பரப்பி புயலாய் பாய்ந்தோடிய
புரவி என இருந்த என் வாழ்வில்,
அன்பெனும் குடையின் கீழ் நின்று
பண்பெனும் தடையைக் கொண்டு நிலைநிறுத்தி,
புயலைக் காட்டிலும் பூவின் வலிமை
பெரிதென உணரச் செய்தாய்.
புதுப் பாதைதனின் வழியைத் தந்தாய்.

பிழையற்ற உன் சிரிப்பாலே
புலிகள் கூட புற்கள் மேயும்
மானாய் மாறிப் போகும்.

பூட்டிய வானம் திறந்து,
செல்வங்கள் மழையாய் விழுந்து
மலையென குவிந்திருந்தாலும்
உன் மனம் என்னும் 
மென்மலரின் முன்னே
சுருங்கித் தான் போகும்.

இலையின் மேல் இசைந்தாடும்
நீர்த்துளி போல
வரைந்தோடும் இவ்வுறவு
தொடர வேண்டும் வளர்பிறையாய்.

பந்தம் என்னும் மலர்களை
அன்பு என்னும் நாறில் கோர்த்து
சொந்தம் கொண்டு மகிழுவோம்.
சொர்க்கத்தை விலை பேசுவோம்!

அமு(தாய்) வாழ்த்து



எந்நாட்டிற்கும் வேந்தன் ஆயினும்,
எக்கோகுலத்தின் நந்தன் ஆயினும்
என்றும் உந்தன் மைந்தன் நான்தான் அம்மா.

போர்க்கொடி  ஏந்தினும்,
வெற்றிக்கொடி நாட்டினும்,
தொப்புள்கொடி பந்தம்
பகிர்ந்தவள் நீதான் அம்மா.

எந்த பள்ளியும் செல்லவில்லை.
எந்த கல்வியும் தீண்டவில்லை.
நான் கற்ற முதல் வார்த்தை
"அம்மா" தானம்மா.

என் பசியினைக் கண்ணிலே கண்டவள் நீ.
என் வலியினை மொழியிலே உணர்ந்தவள் நீ.

என் வசைகள் கூட உனக்கு
மென் இசை தான் போலும்.
என் அலட்சியம் கூட உனக்கு
பரீட்சயம் தான் போலும்.

தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்
என்பதை உணர்த்தியவள் நீதான் அம்மா.
உன் தாலாட்டு கேட்டே உறக்கம் கொண்டேன் அன்று.
இசையின்றி துயில் தேடி அலைகிறேன் இன்றும்.

ஐயிரு மாதங்கள் இருளிலே
நீ தந்த கதகதப்பை
இன்று வரை
வெளிச்சத்திலும் தர தவறவில்லை.

மழலை வேளையிலே,
தம்பதிகளின் தனிமையிலே
இடையனாய் நடுவில்
நான் வந்து படுத்தாலும்,
கேசம் கோதி அணைப்ப்பாயம்மா.

பாதி தூக்கத்திலே செல்வாயோ என
உன் சேலையை இறுகப் பற்றிய
நாட்கள் இன்னும் 
என் நினைவிலே நகரவில்லை.

உன் பசியும் பருவ மழை போல் தான்.
நாங்கள் உண்ட பின்பே
உனக்கு பசி வரும்.
எங்கள் வயிற்றின் தேவை அதிகரித்தால்,
உன் பசியும் பறந்தே விடுமம்மா.

கைம்மாறு செலுத்த இது
நன்றிக் கடன் அல்ல.
இந்த கன்றின் கடன்
இன்னும் கூட கூடட்டும்.

உன் காலம் கரைந்தோடுவதைக் கண்டு
கவலைக் கொள்ளாதே அம்மா.
பந்தம் இது மீண்டும் மீண்டும் தொடரும்,
நீ என் தாயாகவோ,
நான் உன் தந்தையாகவோ.

அன்பினால் அடை கட்டிக் கொண்ட
வார்த்தைகளைச் சுமக்க இயலாமல்
இங்கு கரை சேர்த்துக் கொள்கிறேன்.
வாழ்த்துக்கள் அம்மா!!

புத்தகம்


சிலருக்கு இதைக் காண்பதே
பெரும் கனவு;
சிலருக்கு இதைக் கண்டாலே
வரும் கனவு :-)

போதி மரம்

இவள் நிழலைத் தொடும்
வேளை எல்லாம்
காதல் என்னும் 
ஞானம் அடைகிறேன்.
சேலை கட்டிய
போதி மரம் இவள்!!

என் பெயர் பாமரன்



பாரத பெரியோர்களே,
தேச பிதாக்களே,
மண்ணின் மைந்தர்களே,

இங்கு மொழியால் பிரிக்கப்பட்ட
இனங்கள் 28 எனில்,
வலியால் வகுக்கப்பட்ட
ஒரே இனம் நாங்கள் தான்.

உழைப்பெனும் உடை மட்டுமே
எங்களுக்கு உத்திரவாதம்,
ஊதியங்கள் அல்ல.
வேலிகள் பல கடந்தே
கூலிகள் சில காண்போம் நாங்கள்.
என் பெயர் பாமரன்.

அடே பாரதியே,
நீயும் எங்கள் இனம் தானே!
நல்லதொரு வீணை செய்ய
ஏங்கினாயே முண்டாசு பகலவனே!

எங்கள் பானைகள்
காலி ஓசை எழுப்பும் போது
நீ வீணை இசை வேண்டுவது
தகுமோ கவிகளிறே?
நினைவில் கொள்,
என் பெயர் பாமரன்.

எங்கள் நாட்டின் அரசியலுக்கு
அக்கினி சுட்ட வடுவாய்
கொள்கை ஒன்று உண்டு.

எங்கள் விழியில் வழியும் வெந்நீரில்
அவர்கள் விளம்பரம் தேடிக் கொள்வார்கள்.
விலை மதிப்பற்ற உயிருக்கு
விலையும் பேசி செல்வார்கள். 

தேர்தல் பண்டிகையில் மட்டுமே
நாங்கள் அரவணைக்கப்படுவோம்.
ஏனைய வேளையிலே,
எங்கள் வயிற்றின் நெருப்பும்
அணைக்க ஆளின்றி அவதிப்படுவோம்.
என் பெயர் பாமரன்.

கல்வியை எங்கள் கண்மணிகள் பெற
வேள்வியை மூட்ட வேண்டுமோ?
உணர்வுகள் அற்ற சடலங்கள் நாங்கள்.
உரிமைகள் அற்ற படலங்கள் எங்கள் வாழ்க்கை.
என் பெயர் பாமரன்.

பொருள்:
வேள்வி - யாகம்

Friday, December 23, 2011

நிலா


நிலா,
வானம் என்னும் வாணலியில்
வறுக்கப்பட்ட வெள்ளி அப்பளம்.

வெண்துணி அணிந்த
கைம்பெண் நீயோ?
இல்லை,
நீ ஒரு கவின்மிகு காரிகை.
உனைக் களவாட சுற்றுதோ
ஒளிரும் கள்வர் கூட்டம்.

காதலில் கரைந்து கரைந்து 
பிறையாய் தேய்ந்தாயோ பெண்ணே!

காதலின் அங்கம் நீ!
காதல் அரிச்சுவடியில்
மெய்யிலே தவழ்ந்திடும் உயிர்களை
இணைத்திடும் பாலம் நீ!

உள்ளத்தில் உறங்கிடும் உணர்வுகளை
ஊடுருவி வெளியே கொணரும்
வெளிச்சம் நீ!

இருளில் இடறி துவண்டு கிடக்கும்
பூமிச் சிற்பத்திற்கு
உன் கீற்றுப்பாலே தீர்த்தம்.

பெண்ணாயினும்,
மாதவிலக்கு உனக்கு விலக்கு
ஆயினும்,
மாதமொரு முறை
எங்கு மறைந்து நிற்கின்றாய்?

உன் முகத்தில் உள்ள வடுக்கள்,
மேகங்கள் மோகம் கொண்டு
மோதியதால் வந்த காயங்களோ?

நிலா,
நீ எட்ட முடியாத தொலைவில்
வடிக்கப்பட்ட வட்ட கோபுரம்.
                                                                  -மழைக்கனல்

ரோஜாப் பூ


அவள் கூந்தலில்
ஒரு 
திருஷ்டிப் பொட்டு.
                                        -மழைக்கனல்

தேர்தல்


ஒரு சொட்டு
மையின் விலை
500 ரூபாய்,
இன்று மட்டும்..
                                       -மழைக்கனல்

எவளோ எவளோ ..

எவளோ எவளோ..
கண்கள் மட்டும் அது எனதோ,
கண்ணுக்குள்ளே அது அவளோ!

எவளோ எவளோ..
நெஞ்சம் மட்டும் அது எனதோ,
உள்ளே துடிப்பது அவளோ!

கால்கள் ஓடுது,
காற்றினில் மனம் பாவை தேடுது,
ஏனோ.. காதலில் விழுந்தேனோ!

கைகள் ஆடுது,
தண்ணீரில் தகதிமி போடுது,
ஏனோ.. காதலில் விழுந்தேனோ!

இல்லாத தேசம் ஒன்றை எனக்குள் கண்டேன்,
காதல் வரைபடத்தில் அதைச் சேர்த்துக் கொண்டேன்.
அவளை நினைத்தே பூக்களில் முட்டிக் கொண்டேன்,
என்னைக் கசக்கிய பூக்களைத் திட்டிக் கொண்டேன்.

ரகசியமாய் மொட்டுக்குள் 
அவளுக்கொரு இடத்தைக் கண்டேன்,
மொட்டு விரிந்து 
அதைக் காட்டிக் கொடுத்ததில் முழுதாய் நொந்தேன்.

எவளோ எவளோ..
இனி கன்னி இல்லை என் மனது,
அள்ளிப் போனது அவள் அழகு.

எவளோ எவளோ..
தூக்கம் தொலைந்தது இரவு,
செத்து மடியுது கனவு.

வாழ்க்கையின் வாசலை 
காதல் அடைத்துக் கொண்டது.
அவளே சாவி, 
எப்போது திறந்து செல்வது.

அவளை நினைத்து நினைத்தே
மூளைக்கும் மூச்சு திணறல் வந்ததோ?
அவளே ஆக்சிஜன்,
அவளை நினைத்தே மீண்டும் மீண்டு வந்ததோ!

எவளோ எவளோ..
கண்கள் மட்டும் அது எனதோ,
கண்ணுக்குள்ளே அது அவளோ!
                                                                              -மழைக்கனல்

மேகங்கள்


நீல சமுத்திரத்தில்
ஆளில்லா
படகு சவாரிகள்..
                                         -மழைக்கனல்

வறுமை


(ஒரு ஏழைப் பெண்ணின் அறைக்கூவல்)

என் வயிற்றின் 
வாசம் அறிந்தது
இரண்டு மட்டுமே..
என் பிள்ளையும்
ஈரத் துணியும்!
                                               -மழைக்கனல்

டீச்சர்



நாங்கள்
கரை சேர்ந்து விட்டோம்.
ஆனால்,
இன்னும் நீங்கள் மட்டும்
தோணியாய்..
                                                     -மழைக்கனல்

பொருள்:
தோணி - படகு

பனித்துளி


இளைப்பாற ஒரு 
விசிறி வேண்டும்
இலையின் மேல்
வியர்வைத் துளிகள்..
                                            -மழைக்கனல்

கதாநாயகி


ரசிகனுக்கு இவள் பொன்சிலை,
திரைமறைவிலோ கறிவேப்பிலை.

ஆடைகளோ ஏராளம்
கவர்ச்சி தான் 
இவளிடம் தாராளம்

கரங்களின் விரல்களாய்
இவள் இல்லை.
வளர்ந்தால் வெட்டப்படும்
நகங்கள்தான் இவள்.

திரைமறைவிலோ தன்மானம்
இழக்கின்றாள்.
திரையிலோ போலி வெகுமானம்
பெறுகின்றாள்.

வாய்ப்புக்காக தன்னையே
வழங்குகின்றாள்.
வாழ்க்கை கெட்டு நடுவழியில் 
செல்கின்றாள்.

இவளின் நிலை மாற தவறினால்
திரையுலகிற்கு வெட்கம்.
அதுவரை திரைக்கதவுகள்
நாயகன் கைப்பக்கம்.
                                                                     -மழைக்கனல்

எங்கள் தமிழ்நாடு இது!


இயற்றமிழ் இயல்பாய் உளம்பெற்ற எங்கள் தமிழ்த்திருநாடு!
இசைத்தமிழ் இனிதாய் வளம்பெற்ற எங்கள் தமிழ்த்திருநாடு!
நாடகத்தமிழ் நாளும் நலம்பெற்ற எங்கள் தமிழ்த்திருநாடு!

இலக்கணமும் இலக்கியமும் கைக்கோர்த்து 
கரம் கூப்பிய எங்கள் தமிழ்த்திருநாடு!!

விண்ணைப் பிளக்கும் வீரத்திலே
எங்கள் பெண்ணும் சளைத்தவளில்லை!  
அள்ளிக் கொடுக்கும் கொடையினாலே
எங்கள் அன்பும் குறைந்ததில்லை!

வைகையும் காவிரியும்
பரணியும் சிருவாணியும்
வலம் வரும் வரம் பெற்றது
எங்கள் தனித்திருநாடு!

சங்கம் முழங்கிய காலத்திலே
பல சிங்கங்கள் ஆண்ட வீரத்திருநாடு!

முடியாட்சி முதல்
குடியாட்சி வரை
அறத்தை அரவணைக்கும்
அருட்திரு தமிழ்நாடு!

இந்நாட்டின் வளங்காப்பது
நம் கடமை அல்ல,
நம் உணர்வுகளின் உரிமை.

வாழ்ந்து காப்போம்!
வாழ காப்போம்!!
                                                               -மழைக்கனல்

பர்தா


அவள் முகத்தில் மட்டும்
தினசரி
சந்திர கிரகணம்..
                                          -மழைக்கனல்

இரயில் பயணம்


இரயில்,
நகரும் வீடுகள்..

சேவகம் மட்டுமே
இதற்கு தெரிந்த மொழி.
சமத்துவம் மட்டுமே
இது அறிந்த வழி.

இரயில் பயணம்,
நான் கொள்ளும் ஆனந்த சயனம்.
தாய் எங்கோ ஓரிடத்தில்
ஆனால்,
தாலாட்டு மட்டும் சுகமாய் இங்கு.

சன்னல்களில் திரைச்சுருளை
ஒட்டியது யார்?
திரைப்படமாய் காட்சிகளின் ஓட்டம்.

ஈசல் உறவுகள் இங்கு ஏராளம்.
அன்றே உறவாடி
அன்றே மறப்போம்.

இந்த பயணத்தில்,
தொடும் காற்றில் உண்டு காதல்.
உலவும் இரவில் உண்டு இதம்.
குலுங்கும் ஓசையில் உண்டு இன்னிசை.

சன்னலின் உள்ளே
நானும் ஒரு கைதியாய்.
வர வேண்டும் இறைவன் இப்போது.
கேட்பேன் சிறகினை வரமாய் அப்போது.

ரயிலுக்கு இணையாய்
ரஞ்சகமாய் பறக்க வேண்டும்.
இந்த இனிமையில் மூழ்கி
இப்படியே இறக்க வேண்டும்.
                                                                   -மழைக்கனல்

டீ கிளாஸ்


பலருடைய எச்சில்
பட்டதாலே
இங்கு வேசிகள்
ஒதுக்கப்படுகிறார்கள்..
உன்னை யாரும்
மறுப்பதில்லையே, ஏன்?

லிப்ஸ்டிக்


அவள் இதழ்
தொட்டதால்
நாணத்தில் சிவந்தாயோ??

அம்மா


ஐந்தரை அடியில் 
அன்பு சுரக்கும்
ஒரு
அட்சய பாத்திரம்.
                                                 -மழைக்கனல்

சித்திரை பெண்ணே...!!



சித்திரை பெண்ணே!
என் மனதில்
முத்திரை பதித்த மணியே!
என்னைத் தமிழை
மறக்கச் செய்தவளே!
உன்னைக் கண்டதும்,
என் முத்தமிழும்
உன்பின் ஊர்வலம் செல்லுதடி!
கத்திக்குத்தையும் தாங்கிடும்
என் இதயம்
உன் கடைக்கண் பார்வையில்
சிக்கித் தவிக்குதடி!
இதயத்தில் போதாதென்று
அறிவிலும் ஏற்றினேன் உன்னை..
சிந்திக்கும் நேரமெல்லாம்
திகட்டிட நீ வந்தாய்..
என் காதல் கடலின்
கலங்கரை விளக்கே!
என்னைக் கவிதைக்கு அர்ப்பணித்தேன்.
அதை உனக்குச் சமர்ப்பித்தேன்.
                                                                        -மழைக்கனல்

மனமா? மணமா?


காலமெல்லாம் காத்திருந்தும்
மனம் தர மறுத்தாய்.
இன்று,
என் கல்லறைத் தூக்கத்திற்கு
மணம் தர
மலர் கொண்டு வந்தாயோ??
                                                              -மழைக்கனல்

விக்ரகம்


விதைகளின் நடுவே
ஒரு விக்ரகம்...
வகுப்பில் நீ!
                                                        -மழைக்கனல்

Thursday, December 22, 2011

நான்காம் தமிழ்


அழகே!!
தமிழ்,
இயல் இசை நாடகம்
மூன்று வகைப்படுமாம்.
அழகுத்தமிழ்,
உன்னைச் சேர்க்காமல் விட்டதெப்படி??
                                                                           -மழைக்கனல்