அடி தாமரையே,
இன்னும் ஒரு ஜனனம் வேண்டும்.
ஜாதி என்னும் விதியினைத் திருத்திட வேண்டும்.
உன் உள்ளக் கிடங்கில் தவிக்கும் சொற்கள்
உதட்டில் வர வேண்டும்.
உன் உதட்டில் நெருடும் சொற்கள்
என் இதழில் தர வேண்டும்.
காதலை மறைக்கும் காட்சிகளை
இந்த காரிகை கடந்திட வேண்டும்.
காதல் மரிக்கும் காலம் முன்னே
அந்த காரணம் கண்டிட வேண்டும்.
சலனம் தொடுக்கும் மன்மதன் அம்பினை
சலவை செய்திட வேண்டும்.
காதல் விடுகதை விடுக்கும் அம்பினை
காட்சிப் பொருளாக்க வேண்டும்.
இருந்தும் இறந்தும் நகர்கின்ற நரகம்
இன்றே நின்றிட வேண்டும்.
விருப்பும் வெறுப்பும் அலையென அடிக்குது
விடுதலை வென்றிட வேண்டும்.
உன் மௌனம் பேசும் மொழியின் அர்த்தம்
சம்மதம் என்றால்,
புது சரித்திரம் எழுதிட வேண்டும்
சம்மதம் என்ற சொல்லுக்கே
இங்கு தடை என்றால்,
அதுவே எனக்கு சவக்குழி ஆகிட வேண்டும்.
அய்யா பாரதி,
உன்னைப் போல்
நான் கண்ணனைக் காதலிக்கவில்லை.
ஒரு கன்னியைக் காதலித்துத் தொலைத்து விட்டேன்.
உன் வார்த்தை நிறைவேற,
இன்னும் ஒரு யுகம் காத்திரு.
மீண்டும் ஒரு ஜனனம் எடுத்து
புதியதொரு உலகம் செய்கிறேன்.


0 comments:
Post a Comment