Sunday, January 29, 2012

சாதி முகம்



செம்பியன் வீழ்ந்தாலும்
செம்புயிர் மாண்டாலும்
செம்புண்ணீர் வடிவது ஒன்றே!


சாதி என்னும் சாயப் பூச்சால்
மனிதம் மறந்து போச்சு.
நேற்றைய தேசிய தலைவர்கள்
இன்றைய சாதிய அடையாளங்கள்.


அண்ணன் தம்பி நாம் என
கல்வியில் கண்டவர் கூட
அவன் தலைவன் மாண்டால்
இவன் தம்பி தலை கொய்வான்.

தனிமனிதன் ஆளுமை காட்ட
பலமனிதரை இரையாய் வீசும்
இரத்த சமுத்திரம்.


இருவேறு சாமரத்தின்
காற்றுகள் கலக்கப்பட்டால்
கவலையின்றி காதல் கருவறுக்கப்படும்.
காதலர் தலை நறுக்கப்படும்.

மரபு என்னும் முகமூடி அணிந்து
மனிதன் என்ற நிலை மறந்தனர்.

தேசத்தின் பரப்பில் செம்மண் வகிப்பது
மூன்றில் ஒன்று.
காரணம் கண்டேன் இன்று.

சாதி என்னும் முகத்திரை
கிழியாத வரை
சாக்கடை கூட செந்நீர் நெடி தான்.


பொருள்:
செம்புயிர் - கீழ்நிலை உயிர்கள்
செம்புண்ணீர் - இரத்தம்
சாமரம் - விசிறி




Thursday, January 26, 2012

மழை



பூமிக்குப் பூப்புனித நீராட்டு விழாவோ?

மழை,
*விண்ணையும் மண்ணையும்
இணைத்திடும் தண்ணீர் வடங்கள்.

*வான் அன்னை, பூமிப்பிள்ளைக்கு
தந்திடும் உயிர்ப்பால்.

*விண்மரம் விழுதாய்
மண்ணுக்கு அனுப்பிய தூது.

*வான மைதானத்தில் ஓடும்
மேக குழந்தைகளின் வியர்வைத்துளிகள்.

*வறண்ட நிலத்தைக் காணும் போதெல்லாம்
வானம் வடிக்கும் கண்ணீர் துளிகள்.

*வான் கடலினின் தவறி விழுந்த
திரவ முத்துக்கள்.

மழை, தூரிகை.
அதைக் கொண்டு
வானம் எழுதிடும்
பூமியில் ஓவியம்.

மழை, அழகு.
ரசித்துப் பார்க்க நேரமில்லை.

மழை, சங்கீதம்.
லயிந்து கேட்க யாருமில்லை.

வாசனை..
மாரிக்கு மண்ணின் வரவேற்போ?

மானுடம் என்ன செய்தோம்,
மாசைத் தவிர..

Wednesday, January 25, 2012

முத்தம்



உன் இதழில் 
வழியும் தேன்,
என் இதழில் 
இனிக்கிறது!!

தாழம்பூ முல்லையானதோ!!



(தன் தமக்கை தாய்மை பேறினை அடைய போவதை அறிந்த
சகோதரனின் சந்தோஷ சிதறல்கள்.. )



தாழம்பூ ஒன்று 
முல்லையானதோ இன்று.

மாரனின் தாரமே,
குறும்பு செய்யும் குழவி
நீயென நாங்கள் நினைக்கையிலே
குமரி என்னும் நிலை தாண்டி
குலம் காக்க
குழந்தைப் பேறினைச் சுமந்திட்ட
ஆயவள் நீயென உணரச் செய்தாயோ?

தமையன் என்னும் தரத்தை உயர்த்தி
தாய்மாமன் என்னும் மகுடம்
அளித்த மணிவிளக்கே,
உனைப் போன்ற தடங்கண்ணும்
தமிழ் போன்ற பேரழகும் கொண்ட
இறகையில்லா தேவதை ஒன்றை
உலகிற்கு அறிவிப்பாயோ?
என் மடியில் அதனை தந்திடுவாயோ?

உன் மழலை கண்டிட
தேவை எனக்கு ஒன்பது திங்கள்.

வாயுவோடு வாதிட்டு 
வானின் செல்லினங்கள் எடுத்து வந்து
தொட்டில் கட்ட 
தேவை ஒரு திங்கள்.

வருணனோடு போரிட்டு
வானவில்லை எடுத்து
தொட்டில் மேல் அலங்கரிக்க 
தேவை ஒரு திங்கள்.

சிவனோடு சண்டையிட்டு
பிறைமதியை பறித்து வந்து
பிள்ளை அருந்தும் பால்சங்காக்க 
தேவை ஒரு திங்கள்.

தேவர்களை தேடவிட்டு
நட்சத்திரங்களை ஒன்று கூட்டி
கிறங்கச் செய்யும் கிலுகிலுப்பை செய்திட 
தேவை ஒரு திங்கள்.

மலர்களிடம் மண்டியிட்டு
அவற்றின் நிறங்களை நிறைத்து வந்து
ஆடை கட்டி அள்ளி தர
தேவை ஒரு திங்கள்.

இசையிடம் இனிதே வேண்டி
சங்கீதங்களைச் சங்கமித்து
தலைப்பிள்ளைக்குத் தாலாட்டாய் தந்திட
தேவை ஒரு திங்கள்.

விஷ்ணுவிடம் விவாதித்து 
சுழலும் சுதர்சனத்தை வாங்கி
நடைபயிலும் சக்கரமாய் சுழலவிட
தேவை ஒரு திங்கள்.

அனுமனிடம் அனுமதி வாங்கி
சஞ்சீவி மலையின் சர்வ சித்தங்களையும்
சிறுமதலைக்கு மருந்தாய் மாற்றிட
தேவை ஒரு திங்கள்.

மதுசுரம் நீட்டிய மதுவோடு
பெற்றத்தின் வெண்பாலும் பலாவும்
கலந்திட்ட சுவைதரும் பெயர் ஒன்றை தேடிட
தேவை ஒரு திங்கள்.

பார் போற்றும் பதுமம்தனை கண்டிட
வருவேன் பத்தாம் திங்கள்.

மொய்ம்போடு இரு!
கொண்கன் தானே உள்ளான் உன்னோடு!
எல்லும் சோமனும் மாறி மாறி வருவர் பின்னோடு!
குமிண்சிரிப்பு கொட்டிடும் 
குழந்தை தானே வரும் தன்னோடு!

தாழம்பூ ஒன்று 
முல்லையானதோ இன்று..


பொருள்:
மாரன் - மன்மதன்
ஆய் - தாய்
தடங்கண் - பெரிய கண்.

செல்லினங்கள் - மேகக்கூட்டங்கள் 
சுதர்சனம் - விஷ்ணுவின் கையில் உள்ள சக்கரம்
மதலை - குழந்தை
மதுசுரம் - தேனீ
பெற்றம் - பசு
மொய்ம்பு - உறுதி
கொண்கன் - கணவன்
எல் - சூரியன்
சோமன் - சந்திரன்
குமிண்சிரிப்பு - அழகிய சிரிப்பு

இந்தியா என்றொரு நாடு



என் நாட்டின் கதை கொஞ்சம் கேளுங்கள்.
இந்நாட்டின் பிரதிகள் நீங்கள் என்றால்
தலை குனிந்து வாழுங்கள்..

தோழர் பெருமக்களே,
சனிக்கு எள்ளும் எண்ணையும்
இங்கு நாம் ஏற்றிக் கொண்டிருக்க,
சனியில் குடியேற ஆயத்தம்
ஆகிக் கொண்டிருக்கிறதாம்
எங்கோ ஓர் இடத்தில்!

குரங்கில் இருந்து மனிதன் வந்தான் என
நாம் வரலாறு கூவிக் கொண்டிருக்க,
மனிதனே இல்லாமல் மனிதன் வருவான் என
இயங்கிக் கொண்டிருக்கிறது ஓர் கூட்டம்!

பாபர் வருவார் என ராமர் நினைத்திருந்தாலும்
ராமர் இருந்தார் என பாபர் நினைத்திருந்தாலும்
தம்மால் பின்னால் ஓர் யுத்தம் வருமென
இவர்கள் நினைத்திருக்க வாய்ப்பில்லை...

காமராசனுக்கும் கக்கனுக்கும் மீண்டும்
நாம் காத்துக் கொண்டிருக்க
வந்தவனெல்லாம் வாரிச் சுருட்டிக் கொள்வதை
வறியவன் நம்மால் தடுக்க இயலாது!

காப்பீடு திட்டங்கள் எல்லாம் வெறும்
வாய்பார்க்கும் விட்டங்களாய் தான் உள்ளன..
காவல்துறை சட்டங்கள் யாவும்
காலாவதியாகி விட்டன..

நீதியின் வழிகள்
நீர்த்து போய் விட்டன...
வாதியும் பிரதிவாதியும்
வக்கீலின் கறவை மாடுகள் ஆயின..

பட்டம் பெற்றவன் எல்லாம்
சதித்திட்டம் தீட்டுகின்றான்..
பையிலே நோட்டு,
கையிலே ஓட்டு!
ஜனங்களோடு ஒட்டாத ஓர் ஜனநாயகம்!

எங்கள் நாட்டிலும் அப்துல் கலாம் என்னும்
அதிமேதை உள்ளான் என
மார் தட்டிக் கொள்ளும் மாந்தர்களே,
இன்னும் பல ஆயிரம் கலாம்கள்
பரிந்துரை இல்லாமல் பலியாடாய் தான் உள்ளனர்!

சந்திராயனை பறக்க விட்டோம் என
சந்தோஷத்தில் மிதக்கும் சத்தியவான்களே,
இன்னும் பல லட்சம் சந்திராயன்கள்
பறக்க வழியின்றி புதைந்து தான் உள்ளது!

உணர்வுள்ள தோழர்களே,
உங்கள் நெஞ்சிலே புகையும் நெருப்புகள்
எரிமலையின் குழம்புகளாய் வெம்பட்டும்!

அழிவு என்னும் அகராதி நெருங்கும் முன்னே
நச்சுக் கழிவுகளை வெளியேற்றி கடல் கடத்துங்கள்!
வளர்ச்சியை நோக்கிடும் உணர்வுகள் இல்லாத வரை
வல்லரசு என்பது வெறும் கானல் நீர் தான்!!

மௌன மொழிகள்



என் உணர்வுகளை
உரக்க கத்த வேண்டுமென
எண்ணும் போதெல்லாம்
உன் மௌனம்
அதை உறங்க வைத்தது.

என் அன்பினை
உன் முன்னே
அடுக்கி வைத்த போதெல்லாம்
உன் மௌனம்
அதை அடக்கி வைத்தது.

என் நெஞ்சம்
நிறைந்த போதெல்லாம்
உன் மௌனம்
அதில் நெருப்பைப் பற்ற வைத்தது.

உன் மௌனத்தை ரசிக்கும்
என் நாடகம்,
என்று முடியுமோ?

உன் மௌனத்தின் மொழிகளை
உணர்ந்து கொள்ளும்
மேதை அல்ல நான்.


உன் சொல்லுக்காக காத்திருக்கும்
அறியா பேதை நான்.

உணர்வுகள் உள்ளே அடைக்கப்பட்டால்
உயிருக்குக் கேடாம்.

ஆதலால் அன்பே,
என்றாவது ஒரு நாள்
யாரிடமும் சொல்லாமல்
நான் உறங்கி விட்டால்,
அன்றாவது என் காதருகே
உன் மௌனம் கலைந்து
அழுது விடு!
அப்போதும் உணர்வேன்..

Friday, January 20, 2012

என்(னை)ன பிடிக்கும்?



(நட்பு ஒன்று காதலாய் மலர்ந்த பின்பு)

உனக்குப் பிடித்ததெல்லாம்
எனக்கும் பிடிக்கும் என்ற
மெய்யைச் சொல்ல
உத்தேசிக்கவில்லை என் நட்பு.

அழகு கொஞ்சும் மழலை பிடிக்கும்.
அதை நெஞ்சிலே கிடத்தி
ஆகாயம் காணும் 
அற்புத தருணம் பிடிக்கும்.

அன்னை தந்தை பிடிக்கும்.
அவர்கள் செய்யும் 
அறுபதின் காதல் சேட்டைகள்
அவரறியா காண பிடிக்கும்.

என்னை உயர் கொண்டு சென்ற
கன்னித்தமிழ் பிடிக்கும்.
என் உயிரின் கடைசித் துளி வரை
அதன் சிறப்பை
உலகம் உரைக்க பிடிக்கும்.

உண்மையான உறவுகள் பிடிக்கும்.
ஒருங்கிணைந்து அவர் நடத்தும்
ஒற்றுமையின் அடையாளம் தான்
சின்ன சின்ன விழாக்கள்
எல்லாம் பிடிக்கும்.

இயற்கை ரசிக்க பிடிக்கும்.
அதன் இளமை கண்டு
இரவெல்லாம் உறக்கம் கெட்டு
கண்விழித்து கனவு காண பிடிக்கும்.

புல்வெளி பிடிக்கும்.
அதன் நுனியில்
படுத்துறங்கும் பனித்துளியை,
பற்றி விளையாட பிடிக்கும்.

மின்னல் கீற்று பிடிக்கும்.
அதனால், 
மின்னும் உன் பார்வையும் பிடிக்கும்.

சங்கீதம் பிடிக்கும்.
அதனால்,
சிதறும் உன் சிரிப்பும் பிடிக்கும்.

வெண்ணிலா பிடிக்கும்.
அதனால்,
உன் அகத்தைப் போன்ற
அழகான உன் முகமும் பிடிக்கும்.

நம்பிக்கை பிடிக்கும்.
அதனால்,
நலியா நம் நட்பைப் பிடிக்கும்.

குழந்தைகள் பிடிக்கும்.
அதனால் உன்னைப் பிடிக்கும்.
உன்னால் என்னைப் பிடிக்கும்.

எனக்குப் பிடித்ததெல்லாம்
உனக்கும் பிடிக்கும் என்ற
பொய்யைச் சொல்ல
உத்தேசிக்கவில்லை என் நட்பு.

Monday, January 16, 2012

சுனாமி


நீ ஓரக்கண்ணால்
பார்க்கும் போது தான்
மனதில் உணர்கிறேன்,
டிசம்பர் 26 நிகழ்வை..

Sunday, January 15, 2012

'கற்பூ'ரம்



கற்பினை உன் பெயரோடு
ஒட்டிக் கொண்டவள்.
காற்றும் உன்னைத் தீண்டினால்,
காப்பேன் மானம் என
உயிரை மாய்க்கும்
சீதையின் வழித்தோன்றல் நீ!

Sunday, January 8, 2012

நட்புக்காக



(தனக்காக உயிரை இழந்த நண்பனைக் கண்டு 
தானும் உயிரைத் துறக்கிறான் வீரன் ஒருவன்.
அவர்தம் நட்பினை மெச்சி வீரனின் காதலி பாடும் பாடல்)

இங்கே ரெண்டு விதைகள் கிடக்குது,
மண்ணில் விதைத்து மானுடம் காணுங்கள்.
உள்ளே உள்ள உள்ளங்கள் மட்டும்
காற்றில் கலந்ததன் காவியம் பாடுங்கள்.

என் கண்ணனும் இங்கே துயில்கிறான்.
அவன் கர்ணனும் அருகே கிடக்கிறான்.

சங்கம் தேடி பார்த்ததில்லை.
முன்னோர் கதையைக் கேட்டதில்லை.
நெஞ்சம் அறிந்த இலக்கணம் எல்லாம்
இந்த இருவர் கொண்ட நட்பை மட்டுமே!

இவர் தோளில் ஏற்றிக் கொண்ட 
நட்பின் கதையை எங்கே துவக்குவது?

நேற்று வரை காதலில் கரைத்த என் மன்னன்
இன்று என்னைக் கண்ணீரில் கரைக்கின்றான்.
எனக்குள் கூடி ஓர் உயிரைக் கொடுத்த தலைவன்
நட்பைத் தேடி தன உயிரைக் கொடுத்தானோ?

தோழன் அவன் வாழ்ந்ததும்
தோழமைக்காக!
இன்று மாய்ந்ததும்
என் நாதனுக்காக!

இவர் கால்தடம் பதித்த பாதைகள் யாவும்
இப்போது கலக்கத்தில் ஆழ்ந்ததோ?

இவர் வாசம் அறிந்த அந்த மரங்கள்,
இப்போது சுவாசம் விட மறுக்கின்றதோ?

இவர் விளையாட்டை ரசித்த விழிகளும்
இப்போது விக்கித்து போனதோ?

இவர் கலகலப்பாய் செய்த காதல்கள் எல்லாம்
இப்போது களையின்றி காற்றில் காய்கின்றதோ?

இவர் பிரிவைக் கேட்டு 
திரளும் கூட்டங்களே,
மிரளும் மேககூட்டத்தைப் பாருங்கள்.

சோகத்தில் மேகத்தின் சரீரமும்
கருத்துப் போனதைப் பாருங்கள்.
அவை கண்ணீரைக் கொட்டி
கதறி அழும் நேரம் இதுவோ?

இவர்கள் மையல் கொண்டவர்கள்.
நட்பின் மையம் நின்றவர்கள்.
எவரேனும் ஒருவர் இப்போது எழுந்தாலும்,
உயிரைப் பங்கீட்டு மீண்டும் வருவார்கள்.

ஓய்வின்றி நட்பாண்ட இவர்களை
சற்று உறங்கச் சொல்லுங்கள்.
முற்றுப்புள்ளி ஓவியத்திற்கு மட்டுமே,
தூரிகைக்கு அல்ல!!

Tuesday, January 3, 2012

காதல் நல்லது.. காதல் கெட்டது..

காதல்,
விதையினை விருட்சமாக்கும்.
பயிரினைப் பஸ்பமாக்கும்.

காதல்,
பாலையில் சோலையாகும்.
சோலையில் சர்ப்பமாகும்.

காதல்,
களைப்புக்கு நீராகும்.
களிப்புக்கு நஞ்சாகும்.

காதல்,
வேகத்தை மூட்டும்.
விவேகத்தை மூழ்கடிக்கும்.

காதல்,
செல்வத்தில் அமிர்தமாகும்.
வறுமையில் அமிலமாகும்.

காதல்,
நெறிப்படுத்தும் அங்குசமாகும்.
குத்துப்பட்டால் சீழ் பிடிக்கும்.

காதல்,
மின்னலாய் ஒளி தரும்.
மின்சாரமாய் பலி இடும்.

காதல்,
மனதில் துடிப்பைக் கொடுக்கும்.
இதய துடிப்பை எடுக்கும்.

காதல்,
மோகத்தில் தென்றலாய் வருடும்.
சோகத்தில் புயலாய் நெருடும்.

காதல்,
கல்லிலே கடவுளைக் காட்டும்.
கடவுளில் கல்லைக் காட்டும்.

காதல்,
தெரியாத வினாக்களுக்கு விடையளிக்கும்.
தெரிந்த விடைகளை மறந்தே போகும்.
காதல் நல்லது.. காதல் கெட்டது..


பொருள்:
சர்ப்பம் - நாகம்
களிப்பு - மகிழ்ச்சி
அங்குசம் - யானையை அடக்க பயன்படும் கூர்மையான முனை கொண்ட கம்பு

Sunday, January 1, 2012

அறிவியல் வளர்ச்சி


(கிராமத்து பாட்டியும்  வெளிநாட்டிலிருந்து வந்த பேரனும்)

"அமெரிக்கானு ஏதோ சொல்லி 
பறந்து போனீயே?
இந்த அப்பத்தாவ அஞ்சு வருஷம்
மறந்து போனீயே?"

"கால நேரம் கடகட-னு
கடந்து போனாலும்
என் அப்பத்தாவ அரை நொடியும்
மறக்க முடியுமா?"

"அம்மாபட்டியில் இல்லாதத
அமெரிக்காவுல என்ன
கண்டீர் அய்யா?"

"நான் சொன்னா, அது
காத்துல தான் 
கரஞ்சு போயிடும்.
காட்சியாவே கொண்டு வந்தேன்,
பாத்து ரசிச்சுக்க.."

"மூடி திறக்கும்
டிரங் பொட்டி
எனக்கு தெரிஞ்சுது.
வெளிச்சம் காட்டும்
இந்த பொட்டில
என்ன இருக்குது?"

"டி.வி. கூட தேவையில்ல
இந்த காலத்துல.
இந்த லேப் டாப் மட்டும் இல்லையனா
எனக்கு வாழ்க்கையில்ல"

"வானத்தையே இடிக்குறாப்புல
கட்டடம் இருக்குது.
அங்க கீழிருந்து மேல போக
எத்தனை நாளாகுது?"

"லிப்ட் என்னும் பெட்டி ஒண்ணு
உள்ள இருக்குது.
பத்து நொடியில் பத்தாவது மாடி
கொண்டு சேக்குது"

"ஆயிரம் மைல் அப்பால
இருந்தியே ராசா.
உன் அப்பன் ஆத்தா குரல கூடவா
கேக்க தோணல?"

"செல்போனும் வந்தாச்சு
கவலை எதுக்குதா?
உலகமே அடங்கியாச்சு
கைக்குள்ள ஆத்தா"

"குரல மட்டும் கேட்டாக்கா 
போதுமா கண்ணு.
உன் முகத்த பாக்க தவிக்குமய்யா
இந்த கிழவியின் கண்ணு"

"இண்டர்நெட்டும் காமிராவும்
வளைய வருகுது.
வாசல் முதல் வானம் வரை
எல்லாம் தெரியுது"

"உடம்பு கிடம்பு நோவு வந்தா
பாத்துக்க ராசா.
என் நெனைப்பெல்லாம் நீதானே
பாத்துக்க ராசா"

"மருத்துவத்தின் வளர்ச்சி எல்லாம்
மலைக்க வைக்குது.
நோகாம, வந்த நோயின்
கணக்க தீக்குது"

"இன்னும் எத்தன நாள் தூர நின்னு
புலம்புறது ராசா.
உன் கொள்ளிக்காக காத்திருப்பேன்
வந்துடு ராசா"

"பறவை கூட போட்டி போட்டு
பறக்குது ஃப்ளைட்டு.
நாம ஏறி நின்னா
பத்து மணியில் வந்திடும் வீடு.

உலகம் ரொம்ப சுருங்கி போச்சு.
வளர்ச்சி ரொம்ப பெருகி போச்சு.
புதுசா விடியுது தினம் தினம்.
அப்பத்தா,
உன் அன்பு மட்டுமே நிரந்தரம்"