(கிராமத்து பாட்டியும் வெளிநாட்டிலிருந்து வந்த பேரனும்)
"அமெரிக்கானு ஏதோ சொல்லி
பறந்து போனீயே?
இந்த அப்பத்தாவ அஞ்சு வருஷம்
மறந்து போனீயே?"
"கால நேரம் கடகட-னு
கடந்து போனாலும்
என் அப்பத்தாவ அரை நொடியும்
மறக்க முடியுமா?"
"அம்மாபட்டியில் இல்லாதத
அமெரிக்காவுல என்ன
கண்டீர் அய்யா?"
"நான் சொன்னா, அது
காத்துல தான்
கரஞ்சு போயிடும்.
காட்சியாவே கொண்டு வந்தேன்,
பாத்து ரசிச்சுக்க.."
"மூடி திறக்கும்
டிரங் பொட்டி
எனக்கு தெரிஞ்சுது.
வெளிச்சம் காட்டும்
இந்த பொட்டில
என்ன இருக்குது?"
"டி.வி. கூட தேவையில்ல
இந்த காலத்துல.
இந்த லேப் டாப் மட்டும் இல்லையனா
எனக்கு வாழ்க்கையில்ல"
"வானத்தையே இடிக்குறாப்புல
கட்டடம் இருக்குது.
அங்க கீழிருந்து மேல போக
எத்தனை நாளாகுது?"
"லிஃப்ட் என்னும் பெட்டி ஒண்ணு
உள்ள இருக்குது.
பத்து நொடியில் பத்தாவது மாடி
கொண்டு சேக்குது"
"ஆயிரம் மைல் அப்பால
இருந்தியே ராசா.
உன் அப்பன் ஆத்தா குரல கூடவா
கேக்க தோணல?"
"செல்ஃபோனும் வந்தாச்சு
கவலை எதுக்குதா?
உலகமே அடங்கியாச்சு
கைக்குள்ள ஆத்தா"
"குரல மட்டும் கேட்டாக்கா
போதுமா கண்ணு.
உன் முகத்த பாக்க தவிக்குமய்யா
இந்த கிழவியின் கண்ணு"
"இண்டர்நெட்டும் காமிராவும்
வளைய வருகுது.
வாசல் முதல் வானம் வரை
எல்லாம் தெரியுது"
"உடம்பு கிடம்பு நோவு வந்தா
பாத்துக்க ராசா.
என் நெனைப்பெல்லாம் நீதானே
பாத்துக்க ராசா"
"மருத்துவத்தின் வளர்ச்சி எல்லாம்
மலைக்க வைக்குது.
நோகாம, வந்த நோயின்
கணக்க தீக்குது"
"இன்னும் எத்தன நாள் தூர நின்னு
புலம்புறது ராசா.
உன் கொள்ளிக்காக காத்திருப்பேன்
வந்துடு ராசா"
"பறவை கூட போட்டி போட்டு
பறக்குது ஃப்ளைட்டு.
நாம ஏறி நின்னா
பத்து மணியில் வந்திடும் வீடு.
உலகம் ரொம்ப சுருங்கி போச்சு.
வளர்ச்சி ரொம்ப பெருகி போச்சு.
புதுசா விடியுது தினம் தினம்.
அப்பத்தா,
அப்பத்தா,
உன் அன்பு மட்டுமே நிரந்தரம்"


0 comments:
Post a Comment