(நட்பு ஒன்று காதலாய் மலர்ந்த பின்பு)
எனக்கும் பிடிக்கும் என்ற
மெய்யைச் சொல்ல
உத்தேசிக்கவில்லை என் நட்பு.
அழகு கொஞ்சும் மழலை பிடிக்கும்.
அதை நெஞ்சிலே கிடத்தி
ஆகாயம் காணும்
அற்புத தருணம் பிடிக்கும்.
அன்னை தந்தை பிடிக்கும்.
அவர்கள் செய்யும்
அறுபதின் காதல் சேட்டைகள்
அவரறியா காண பிடிக்கும்.
என்னை உயர் கொண்டு சென்ற
கன்னித்தமிழ் பிடிக்கும்.
என் உயிரின் கடைசித் துளி வரை
அதன் சிறப்பை
உலகம் உரைக்க பிடிக்கும்.
உண்மையான உறவுகள் பிடிக்கும்.
ஒருங்கிணைந்து அவர் நடத்தும்
ஒற்றுமையின் அடையாளம் தான்
சின்ன சின்ன விழாக்கள்
எல்லாம் பிடிக்கும்.
இயற்கை ரசிக்க பிடிக்கும்.
அதன் இளமை கண்டு
இரவெல்லாம் உறக்கம் கெட்டு
கண்விழித்து கனவு காண பிடிக்கும்.
புல்வெளி பிடிக்கும்.
அதன் நுனியில்
படுத்துறங்கும் பனித்துளியை,
பற்றி விளையாட பிடிக்கும்.
மின்னல் கீற்று பிடிக்கும்.
அதனால்,
மின்னும் உன் பார்வையும் பிடிக்கும்.
சங்கீதம் பிடிக்கும்.
அதனால்,
சிதறும் உன் சிரிப்பும் பிடிக்கும்.
வெண்ணிலா பிடிக்கும்.
அதனால்,
உன் அகத்தைப் போன்ற
அழகான உன் முகமும் பிடிக்கும்.
நம்பிக்கை பிடிக்கும்.
அதனால்,
நலியா நம் நட்பைப் பிடிக்கும்.
குழந்தைகள் பிடிக்கும்.
அதனால் உன்னைப் பிடிக்கும்.
உன்னால் என்னைப் பிடிக்கும்.
எனக்குப் பிடித்ததெல்லாம்
உனக்கும் பிடிக்கும் என்ற
பொய்யைச் சொல்ல
உத்தேசிக்கவில்லை என் நட்பு.


0 comments:
Post a Comment