Saturday, December 31, 2011

என் பெயர் பாமரன்



பாரத பெரியோர்களே,
தேச பிதாக்களே,
மண்ணின் மைந்தர்களே,

இங்கு மொழியால் பிரிக்கப்பட்ட
இனங்கள் 28 எனில்,
வலியால் வகுக்கப்பட்ட
ஒரே இனம் நாங்கள் தான்.

உழைப்பெனும் உடை மட்டுமே
எங்களுக்கு உத்திரவாதம்,
ஊதியங்கள் அல்ல.
வேலிகள் பல கடந்தே
கூலிகள் சில காண்போம் நாங்கள்.
என் பெயர் பாமரன்.

அடே பாரதியே,
நீயும் எங்கள் இனம் தானே!
நல்லதொரு வீணை செய்ய
ஏங்கினாயே முண்டாசு பகலவனே!

எங்கள் பானைகள்
காலி ஓசை எழுப்பும் போது
நீ வீணை இசை வேண்டுவது
தகுமோ கவிகளிறே?
நினைவில் கொள்,
என் பெயர் பாமரன்.

எங்கள் நாட்டின் அரசியலுக்கு
அக்கினி சுட்ட வடுவாய்
கொள்கை ஒன்று உண்டு.

எங்கள் விழியில் வழியும் வெந்நீரில்
அவர்கள் விளம்பரம் தேடிக் கொள்வார்கள்.
விலை மதிப்பற்ற உயிருக்கு
விலையும் பேசி செல்வார்கள். 

தேர்தல் பண்டிகையில் மட்டுமே
நாங்கள் அரவணைக்கப்படுவோம்.
ஏனைய வேளையிலே,
எங்கள் வயிற்றின் நெருப்பும்
அணைக்க ஆளின்றி அவதிப்படுவோம்.
என் பெயர் பாமரன்.

கல்வியை எங்கள் கண்மணிகள் பெற
வேள்வியை மூட்ட வேண்டுமோ?
உணர்வுகள் அற்ற சடலங்கள் நாங்கள்.
உரிமைகள் அற்ற படலங்கள் எங்கள் வாழ்க்கை.
என் பெயர் பாமரன்.

பொருள்:
வேள்வி - யாகம்

0 comments:

Post a Comment