வாழ்க்கை நாடகம் நடிக்கும் கலைஞா,
வாழ்வின் சரிவில் சறுக்கும் மனிதா,
நிலைமை எண்ணி வருந்தும் மானுடா,
நீ வந்த பாதையைத்
திரும்பிப் பார்.
பள்ளியில் கல்வியை தள்ளி வைத்திட்டு,
ஆட்டமும் பாட்டமும் அறிவை மழுக்கிட
மதிப்பெண்ணை இழந்திட்ட நிலையைத்
திரும்பிப் பார்.
இளமையில் ஒழுக்கத்தை எட்டி உதைத்திட்டு,
பெண்ணும் ஆசையும் கண்ணை மறைத்திட
நற்பெயரை இழந்திட்ட நிலையைத்
திரும்பிப் பார்.
இடையில், நேர்மையை எண்ண மறந்திட்டு,
பொன்னும் பொருளும் அடைய எண்ணியே
பழியும் பாவமும் ஏற்ற நிலையைத்
திரும்பிப் பார்.
இன்று,
முதுமையில், பட்ட தனி மரம்
உன்னை ஏற்க உலகில் எவருமில்லை.
திரும்பிப் பார்த்த பாதையை அசைபோட்டு
காலனின் வருகையை நாளும் எதிர்பார்.
பொருள்:
காலன் - எமன்

0 comments:
Post a Comment