Sunday, February 12, 2012

துரோணா... தலை வணங்குகின்றோம்!!



(விதையாய் எனக்குள் இருந்த திறமை,
அடர்வனமாய் மாற துணை புரிந்த
எம் ஆசிரியர்களுக்கு வந்தனம்..) 


மாதா பிதா குரு தெய்வம் என
வரிசைப்படுத்தி உங்கள் நிலை காண
விழையவில்லை நாங்கள்.

பிறந்த மணித்துளி முதல்
இறந்த பின் வழியும்
கண்ணீர்த்துளி வரை
மானுடன் என்பவன்
எப்போதும் மாணவன் தான்.

உறவுகள் சில கற்றுக் கொடுக்கும்.
உலகம் சில கற்றுக் கொடுக்கும்.
வெற்றிகள் சில கற்றுக் கொடுக்கும்.
தோல்விகள் சில கற்றுக் கொடுக்கும்.

வாழ்க்கை சில கற்றுக் கொடுக்கும்.
வயது சில கற்றுக் கொடுக்கும்.
சூழ்நிலை சில கற்றுக் கொடுக்கும்.
காயங்கள் சில கற்றுக் கொடுக்கும்.

கற்பதை மட்டும் மனிதன் கைவிடுவதில்லை.
மானுடன் எப்போதும் மாணவன் தான்.

இத்தனைக் கற்றலுக்கும்,
வாழ்கை பாடங்கள் அத்தனைக்கும்
எங்களைத் தயார்படுத்தி
தலைவர்கள் ஆக்குவது
ஆசிரியர்கள் நீங்கள் தான்.

எங்கள் கைப்பிடித்து வீதிவரை
நடைபயில கற்றுக் கொடுத்தது
எம் பெற்றோர் என்றால்,
எங்கள் கைப்பிடித்து
எங்களை எழுத்தறிவித்ததும், 
எங்கள் கரம் பிடித்து 
வாழ்க்கையின் வாசல் வரை
விடைபயில கற்றுக் கொடுத்ததும்
எம் ஆசிரியோர் நீங்கள்தான்.

நாங்கள் ஏகலைவனா அர்ஜுனனா
என்பதை அறியோம்.
ஆனால்,
உங்களையே எங்கள் படிகளாக்கி
உங்கள் அறிவினைக் கைத்தடிகளாக்கி
எங்களை வெற்றியின் விளிம்புக்கு
உயர்த்தும் நீங்கள் ஒவ்வொருவரும்
பாரதம் சொல்லாத துரோணர்கள் தான்.

இமயம் கட்டி இழுத்து வந்து
காணிக்கையாக்க வலுவில்லை.
அதனால்,
இதயம் தொட்டு பணிந்து நின்று
காலமெல்லாம் வணங்குகின்றோம்.

0 comments:

Post a Comment